திங்கள், 19 மார்ச், 2012

நல்நூலகர் விருது

நல்நூலகர் விருது 
திருக்கோவிலூர் நூலகருக்கு வழங்கப்பட்டது



திருக்கோவிலூர், நவ. 18:
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் கிளை நூலகத்தில் மூன்றாம் நிலை நூலகராக பணிபுரிந்து வரும் மு.அன்பழகனுக்கு தமிழக அரசின் நல்நூலகர் விருது வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
பொதுநூலக இயக்ககம் சார்பில் நல்நூலகர் விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு இவ்விழா சென்னை தேவநேயபாவாணர் மாவட்ட மைய நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு ஆசிரியர் பயிற்சி கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் கு.தேவராசன் தலைமை தாங்கினார். பொதுநூலக இயக்குனர் ச.அன்பழகன் வரவேற்புரை ஆற்றினார். அப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திருக்கோவிலூர் நூலகர் மு.அன்பழகனுக்கு நல்நூலகர் விருது, பரிசுத் தொகை ரூ.2,000 மற்றும் பதக்கம் வழங்கி கெளரவித்தார்.
இவ்விழாவில் ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை தென்னிந்திய களப்பணி அலுவலர் ர.ராமசாமி, விழுப்புரம் மாவட்ட நூலக அலுவலர் சி.அசோகன், விழுப்புரம் மாவட்ட பொதுநூலகத்துறை நூலகர்கள் மற்றும் பணியாளர்கள் நலச்சங்கத் தலைவர் கோ.தனுசு மற்றும் நிர்வாகிகள், நூலகர்கள், உறவினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மு.அன்பழகனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
திருக்கோவிலூர் வட்டம், மேலந்தல் கிராமத்தில் பிறந்த மு.அன்பழகன், 1995-ல் அக்கிராமத்தில் பகுதிநேர நூலகராக பணியில் சேர்ந்தார். பின்னர் படிப்படியாக பதவி உயர்வு பெற்றார். மேலந்தல், மணலூர்பேட்டையை தொடர்ந்து தற்போது திருக்கோவிலூரில் பணியாற்றி வருகிறார்.
இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட இவர் கட்டுரை, கவிதைகள் என இதுவரையில் நான்கு நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
தம்முடைய சீரிய நூலகப் பணி வாயிலாகச் சமுதாயத்துக்கு மிகச் சிறந்த தொண்டாற்றியதைப் பாராட்டி போற்றும் வகையில் தமிழக அரசு இவருக்கு நல்நூலகர் விருது வழங்கியுள்ளது.

படம்: சென்னையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் திருக்கோவிலூர் நூலகர் மு.அன்பழகனுக்கு நல்நூலகர் விருது வழங்கியபோது எடுத்தப் படம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக