ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

எனது நாட்குறிப்பேட்டிலிருந்து சில பக்கங்கள்...       _ பாரதி மணாளன்.

நடையாய் நடந்து பல கதைகள் கேட்டபோது எனக்கு பத்து வயது முடிந்திருந்தது.

மேலந்தல் கிராமத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரமுள்ள கொங்கனாமூர் கிராமத்தில் எனது அத்தையை திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். ஆனாலும் அவர்களுக்கு எங்களது கிராமத்திலேயே வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

எனது அத்தையின் கணவர் நிறைய கதைகள் சொல்வார். அப்பொழுதுதான் எனக்கு கதைகள் கேட்கும் ஆர்வம் அதிகரித்தது. அவர் தனது சொந்த கிராமத்திற்கு அடிக்கடி சென்று வருவார். பேருந்து வசதி நேரடியாக இல்லாததால் சில ஊர்களின் வயல்வெளி நடுவே நடந்து சென்று வருவார். அவர் சொல்லும் கதைகளை கேட்டு நானும் எனது மாமாவின் கை விரல் பிடித்து நடந்து சென்று வருவேன்.

அதுபோன்று கேட்கும் கதை என் மனதில் ஆழப் பதிந்து விட்டது. ஏழு மலை, ஏழு கடல்,  வெள்ளைக் காகம், அடர்ந்த வனப்பகுதிக்குள் பெரிய அரண்மனை போன்ற பிரமிப்பூட்டும் கதைகள் கேட்டு கேட்டு என் மனம் ஆச்சரியத்தில் ஆழ்ந்த காலம் அது.

இக்கதைகள் தான் என்னை பல நூல்கள் வாசிக்கச் செய்தது. செடிகளையும் கொடிகளையும் நேசிக்கச் செய்தது. கற்பனை உலகில் மிதக்கச் செய்தது.
இன்னும் சொல்லப் போனால் இக்கதைகள் தான் என்னை ஏர் ஒட்டவும் செய்தது, ஆம் எங்கள் நிலத்தில்  மாடுகள் பூட்டி ஏர் ஓட்டி செல்லும் எனது மாமாவிடம் அவரின் பின்னாடியே நடந்து சென்று கதைகளை கேட்டு வருவேன். அப்படி செல்ல செல்ல எனக்கும் ஏரோட்ட வேண்டும் என்ற ஆசை வந்தது. பழகிய மாடுகளை பூட்டி ஏர் ஓட்ட சொன்னார்கள் இப்படித்தான் ஏரோட்டும் அனுபவம் வாய்த்தது எனக்கு.

கதைகள் கேட்டு கேட்டு வளர்ந்த எனக்கு அவரின் மறைவுக்குப் பின் கதைகளை வாசிப்பின் மூலம் தேடத் தொடங்கினேன்.

தந்தையை இழந்து தாயைப் பிரிந்து வாழ்வைத் தேடிக் கொண்டிருந்த எனக்கு இக் கதைகள் மூலமான வாசிப்பு தான் என் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிறது என்பதை அறியாமலேயே நான் வாசிக்கத் தொடங்கியதும் இப்படித்தான்.
                - இன்னும் தொடரும்...